எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 13 ஜனவரி, 2013


விமானம் பறப்பது எப்படி - தொழில் நுட்ப கண்ணோட்டம்


இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது?!
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு.
ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் - Thrust
கீழ்நோக்கி இழுக்கும் எடை - Weight
பின்னோக்கி இழுக்கும் டிராக் - Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும்.
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்.
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்.
விமானத்தின் எடை ''லிப்ட்'' விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் ''லிப்ட்'' விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்.
சரி பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்.
அதே போல விமானத்தில் ''டிராக் விசையை கொடுப்பது'' காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம்

மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது

ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்
உண்மையில் விமானத்தின் மேலெழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்ளதாக இருக்கும்.
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகாப்டருக்கு வராது) இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆஃப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூரைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.


விண்கல்லை இழுத்துச்சென்று எரிபொருள் நிலையமாக பயன்படுத்த நாசா திட்டம்


விண்வெளியில் சுற்றித்திரியும் ராட்சத விண்கல்லொன்றை இழுத்துச் சென்று சென்று சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தின் எரிபொருள் நிலையமாக பயன்படுத்தும் முயற்சியில் நாசா திட்டமிட்டுள்ளது.

இதற்கான திட்டம் நாசா மற்றும் கலிபோர்னியா அறிவியல் தொழில்நுட்ப மத்திய நிலையம்  ஆகியவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த பேச்சுவார்த்தை அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு நடத்த முடிவு செய்துள்ள அமெரிக்கா,  அதற்காக, இன்னும் 10 ஆண்டுகளுக்கு தேவையான பல்லாயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லும் வழியில் சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தில் எரிபொருள் நிரப்பி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான எரிபொருள் நிலையம் அமைக்க 5 இலட்சம் கிலோ எடையுள்ள விண்கல்லொன்றைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணில் சுற்றி திரியும் அந்த விண்கல் அட்லஸ் 5 ரொக்கெட் மூலம் இழுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அட்லஸ் 5 ரொக்கெட்டுடன் விண்கல்லை பிடிக்கக்கூடிய பெரிய கூண்டு ஒன்றும் அந்த ரொக்கெட்டுடன் சேர்த்து அனுப்பப்படவுள்ளது.

அது விண்கல்லை பிடித்து அப்படியே இழுத்து சென்று சர்வதேச விண்வெளி மையம் அருகே நிலை நிறுத்தும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இன்னும் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என நாசா மையம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், விண்கல்லொன்றை நகர்த்தும் முதலாவது மனித முயற்சியாக அது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய 'குவஸார்' மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிப்பு


அண்டவெளியில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு மாபெரும் 'குவஸார்' மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நாசா அறிவித்துள்ளது. இதை ஒளியின் வேகத்தில் கடக்க 4 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். அந்த அளவுக்கு மாபெரும் அளவில் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த மண்டலம். இந்த 'குவஸார்' மண்டலம் என்.ஜீ.சீ.6872 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

Quasi-stellar radio source ("quasar") என்பது தான் 'குவஸார்'. ஒரு நட்சத்திர மண்டலத்தின் (galaxy)மையக் கருவை அடங்கிய நட்சத்திரம் தான் குவஸார். பல்லாயிரம் சூரியன்களை விட அதிக கனமும் ஒளிவீச்சும் கொண்டவை குவஸார்கள். நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் உள்ள மாபெரும் பிளாக்ஹோலை சூழ்ந்துள்ள இந்த குவஸார்கள் பிளாக்ஹோலில் உள்ள ஆற்றலைத் தான் ஒளியாக, மின்காந்த அலைகளாக வானில் பல பில்லியன் கிலோ மீற்றத் தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கின்றன.

இந்நிலையிலேயே இதுவரையில் காணப்படாத அளவுக்கு மாபெரும் 'குவஸார்கள்' அடங்கிய ஒரு மண்டலத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Large quasar group (LQG)எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மண்டலத்தை கடக்கவே 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிவிடுமாம். ஒளியின் வேகம் என்பது வினாடிக்கு 186,282 மைல்கள் அல்லது 3,00,000 கிலோ மீற்றர்கள். நமது சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 1,50,000,000 கிலோ மீற்றர் தூரத்தைக் கடக்க இவ்வளவு நேரம் ஆகிறது.

நமது பூமி, சூரியன் உள்ளிட்ட நட்சத்திர மண்டலம் இருப்பது மில்கிவே கெலக்ஸி எனப்படும் பால்வெளி மண்டலம். இதற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மண்டலம் ஆண்ட்ரோமெடா கெலக்ஸி. இந்த இரு மண்டலங்களுக்கும் இடையிலான தூரம் 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள். அதாவது நாம் ஒரு விண்கலத்தில் ஒளியின் வேகத்தில் பறந்தால் மில்கிவே கேலக்ஸியிலிருந்து ஆண்ட்ரோமெடா கேலக்ஸியை அடைய 2.5 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

வழமையாக இருவேறு நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான தூரம் 6 முதல் 10 மில்லியன் ஒளி ஆண்டுகளாக இருக்கும். ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குவஸார் மண்டலத்தின் விட்டம் 4 பில்லியன் ஆண்டுகள். அந்தளவுக்கு இந்த மண்டலம் பெரியதாக உள்ளதாம்.

இந்த மாபெரும் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இதுவரையிலும் நாம் விண்வெளி குறித்து வைத்திருந்த மாதிரிகள் கணக்கீடுகள் அனைத்தும் துவம்சமாகியுள்ளன. குறிப்பாக எல்பர்ட் ஐன்ஸ்டீனின் அண்டவியல் கொள்கையை (Cosmological Principle) இது கேள்விக்குறியாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அண்டத்தை எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் அது ஒரேமாதிரியாகவே இருக்கும் என்பது இந்தக் கொள்கையின் சாரம்சம். ஆனால், இந்த மாபெரும் மண்டலம், அந்தக் கொள்கையை சிதைக்கிறது. இதனால் இந்த புதிய மாபெரும் 'குவஸார்' மண்டலம், அண்டம் குறித்த கொள்கைகளை, சித்தாந்தங்களை உலுக்கும் என்கிறார்கள் இங்கிலாந்தின் ரோயல் அஸ்ட்ரனாமிகல் சொசைட்டி விஞ்ஞானிகள்.



யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுபாஸ் ஹோட்டல்




யாழ்ப்பாணத்தின் விக்டோரியா வீதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சுபாஸ் ஹோட்டல், கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து 17 வருடங்களாக இயங்காது உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் இராணுவத்தினரால் பாவனைப்படுத்தப்பட்டு வந்தது.

இராணுவத்தினர் விடுதியினை பயன்படுத்தி வந்தமைக்கு இலங்கை அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வாடகை வழங்கப்பட்டிருந்தது. 2011ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் விடுதியினை உரிமையாளரிடம் மீளவும் கையளித்த நிலையில் சுபாஸ் ஹோட்டல் கடந்த டிசெம்பர் 14ஆம் திகதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா விடுதி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது யாழ்ப்பாண சுற்றுலாத்துறைக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைகிறது. யாழ்ப்பாணத்தில் - இலங்கை உல்லாசப் பயணத்துறையினர் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முதல் சுற்றுலாவிடுதி என்ற பெருமையையும் சுபாஸ் ஹோட்டல் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்விடுதியில் குடும்ப அறைகள் உள்ளடங்கலாக 12 அறைகளும், சகல வசதிகளும் இருக்கின்றமை சிறப்பானதாகும்.

சிறந்த சமையல் கலைஞர்களால் அனைத்து வகையான உணவுகளும் உடன் தயாரித்துப் பரிமாறப்படுவதுடன் யாழில் உள்ள சுற்றுலாப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதற்கான போக்குவரத்தினையும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் விக்டோரியா வீதியில் அமைந்துள்ள சுபாஸ் ஹோட்டலுடன் 021 2224923 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.







"தைப் பொங்கல்" திருநாளும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாடும் - பொங்கல் நிகழ்வுகள் விளக்கங்களுடன்

தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்துவைக்கும் தை மாதம் முதால் திகதி அன்று உலகமெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பெறும் ஒரு பெருவிழாவாகும். இத் திருநாளை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது.  
இவ் விழா சங்க காலத்தில்;  வேளாண்மைக்கு வேண்டிய மழைநீரையும், சூரிய ஒளியையும் (வெய்யிலையும்), காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்த கால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக உழவர்களால் கொண்டாடப்பெற்று வந்ததுள்ளதுடன்; தற்பொழுது உழவர்கள் மட்டும் மன்றி வேறு பல தொழில்புரியும் எல்லா தமிழ் மக்களும் (தம் மூதாதையினரான உழவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த) பண்டிகையாக கொண்டாடுகின்றார்கள். அதன் காரணமாக இப் பண்டிகை "உழவர் பண்டிகை" என்னும் பெயர் மழுங்கி ”தமிழர் பண்டிகை”யாக பொங்கியெழுந்துள்ளது.
பொங்கல் விழாவானது தற்காலத்தில் வீடுகளில் மட்டுமன்றி; ஆலயங்கள், கல்விக் கூடங்கள், தொழில் நிலையங்களிலும், சைவ சமயத்தவர்கள் அல்லாத தமிழ் மக்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பெற்று வருவதனால் தமிழர் பண்டிகையாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பெற்று சிறப்புப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. 
"தைப்பொங்கல் பண்டிகை"யை உழவர்கள் தாம் அறுவடைசெய்த “புதிரை” (நெற் கதிர்களை) அரிசியாக்கி அதில் பொங்கல் செய்து கொண்டாட, பல்வேறு தொழில் புரிவோர் உழவர்களிடம் புதிய அரிசியை வாங்கி பொங்கல் செய்து கொண்டாடுகின்றார்கள். இப் பண்டிகை இவ்வருடம் 14.01.2013 திங்கட்கிழமை அமைவதாக சோதிடம் கணிக்கின்றது. 
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் அதிகமாக வாழும் கனடாவில் உள்ள மிகப்பெரிய மார்க்கம் மாநகர சபை ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜனவரி 13ம், 14ம், 15ம் திகதிகளை தமிழர்களின் பாரம்பரிய நாட்களாகவும், தைப்பொங்கல் பண்டிகையை  பாரம்பரிய விழாவாகவும் அங்கீகரித்துள்ளதுடன் தை மாதத்தினை தமிழர்களின் புனித மாதமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் கனடாவில் ஒரு தமிழர் பண்டிகையையும் அதனோடு தொடர்புடைய மாதத்தினையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் வெளிநாட்டு மாநகர சபை என்ற பெருமையை மேற்படி மார்க்கம் நகர சபை பெற்றுள்ளது.
பொங்கல் என்பதற்கு ”பொங்கி வழிதல்”, ”பொங்குதல்” என்பது பொருள். அதாவது புதிய பானையில் பால் பொங்கி எழுந்து பொங்கி வழிந்து வருவதால், எதிர்காலம் முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கிச் சிறக்கும் என்பதும், களனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதும் இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

“உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் ஏனையோர் சோற்றில் கை வைக்க முடியும்” என்பது பலரும் அறிந்த பழமொழி. அதனால் போலும் உழவுத் தொழிலின் சிறப்பை கூற வந்த திருவள்ளுவர் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” எனவும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என பாரதியாரும் கூறியுள்ளனர்.

மழை பொய்த்துவிட்டால் வேளாமையும் பொய்த்து விடும் என்பதனை கூறவந்த “திரைக்கவித் திலகம் மருதகாசி “ பூமியிலே மாரி (மழை) எல்லாம் சூரியனாலே, பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே” என்று கூறினார். சூரியனால் மழையும், பயிர் வளர்ச்சியும்; மழையினால் பயிர் வளர்ச்சியும், விளைச்சலும் உண்டாகின்றன என்பதனை உணர்ந்த எம் மூதாதயினர் மழைக்கு மூலகாரணியாக விளங்கும் சூரியனை அறுவடைக் காலத்தில் வணங்கி தாம் பெற்ற நெல்மணியில் பொங்கி விருந்து படைத்து நன்றிக் கடன் செலுத்துவது மரபாகி வந்துள்ளது.

இலங்கையில் ஒருவருடத்தில் மூன்று போகம் நெல் சாகுபடிசெய்யும் வளம் சில பகுதிகளில் காணப்படுகின்றன. அங்கே நீர்ப்பசன வசதிகளும் ஆறுகளும் அவற்றிற்கு சாதகமாக அமைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இருபோகம் விவசாயம் செய்யும் வசதிகள் இருந்துள்ளன, அதற்கு அங்கு காணப்பெறும் பெருங் குளங்களே காரணமாகும்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இங்கு ஆறுகளோ, பெரிய குளங்களோ இல்லாத காரணத்தால் வானம்பார்த்த பூமியாக மழைநீரை நம்பி ஒரு போகமே வேளாண்மை செய்யப் பெறுகின்றது. மழைவீழ்ச்சி கிடைக்கும் வருட இறுதிக் காலாண்டுப் பகுதியிலே இம்மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. மழை நீரை சிறிய குளங்கள், குட்டைகளில் சேமித்து வைத்து மழை குறைந்த காலத்தில் நீர்பாச்சுகின்றார்கள்.

புரட்டாதி மாதம் முடிவடைந்த பின்னர் மழைவீழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்தில் யாழ் விவசாயிகள் தங்கள் நிலங்களை பண்படுத்தி, உழுது, நெல் விதைப்பார்கள். அதன் பின் பருவத்தில் களையெடுத்து, பசளையிட்டு கண்ணும் கருத்துமாக பாராமரித்து வருவார்கள். இக் காலப்பகுதியில் பயிரிடம்பெறும் நெல் மார்கழி/தைமாதத்தில் விளைந்து அறுவடைக்கு தயாராகிவிடுகின்றது.

உழவர்கள் மார்கழி மாதத்தில் (தைப்பொங்கலுக்கு முன்) ஒரு நல்ல நாள் பார்த்து “புதிர் எடுத்தல்” நிகழ்வை நடத்துவார்கள். குடும்பத்தலைவர் குறிப்பிட்ட ஒரு நல்ல நாளில் காலையில் குளித்து கடவுளை வணங்கி வயலுக்குச் சென்று; வயல் வரம்பில் முதற்கடவுளான பிள்ளையாரை வைத்து பூ, பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை படைத்து தேங்காய் உடைத்து விநாயகரையும், குலதெய்வத்தையும் வணங்கி, அதன் பின்னர் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவை வெட்டி வீட்டுக்குக் கொண்டு செல்வார். இதேநேரம் குடும்பத்தலைவி தோய்ந்து, வீடு பெருக்கி, கழுவி, மெழுகி புதிர் வாங்குவதற்கு தயாராக இருப்பார்.

தலைவன் கொண்டு வருகின்ற நெற்கதிர்களை மனையாள் வாங்கி சாமியறைக்கு கொண்டு செல்லும் வழக்கம் உண்டு. அதன்பின்னர் கடவுளை வணங்கி புதிய நெற்கதிர்களை சாமியறை மற்றும் சமையல் அறைகளில் கட்டித் தொங்கவிடுவார்கள்.

மிகுதியாக உள்ள நெற்கதிர்களை அரிசியாக்கி தைப் பொங்கலுக்காக வைத்திருப்பார்கள். கடின உழைபின் மூலம் கிடைக்கப்பெற்ற நெற்கதிர்களை நல்ல நாளில் “புதிர்” எடுப்பதன் மூலம் வருடம் முழுவதும் அவர்களுக்கு சாப்பாட்டிற்கு குறைவிருக்காது என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும்.
பொங்கல் நிகழ்வுகள்:
யாழ்ப்பாணத்து மக்கள் தைப்பொங்கலுக்கு உரிய ஆயத்தங்களை முதல் நாளே தொடங்கிவிடுவதோடு முதல் நாள் நடைபெறும் சந்தை முக்கியமான ஒரு சந்தையாக கருதப்படும். இதைப் "பொங்கல் சந்தை" என சிறப்பாக அழைப்பார்கள். பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் தங்களிடம் அதிகமாக இருந்தால். அதை சந்தைக்கு கொண்டு சென்று விற்றுவிட்டு தமக்குத் தேவையான பொங்கல் பொருட்களை வாங்கி வருவார்கள்.

புதுப்பானை, புதுஅரிசி, சர்க்கரை, பயறு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, கற்பூரம், கரும்பு, இஞ்சி இலை, மஞ்சள் இலை போன்ற பொருட்கள் யாழ் மக்களுடைய பொங்கலில் முக்கிய இடத்தைப்பிடிக்கிறன. இப்பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே வாங்கி பொங்கலை ஆவலோடு வரவேற்பார்கள்.

தைப்பொங்கல் தினத்தன்று ஒவ்வொரு குடிமகனும் தம்வீட்டுப் பொங்கல் படையல் சூரியன் உதிக்கும் போதே முதல் விருந்தாக அமைய வேண்டும் என்ற ஆதங்கத்தில் அதிகாலையே விழித்தெழுந்து பொங்கலுக்கான ஆயத்தங்களைச் செய்வார்கள்.  எல்லோரும் அதிகாலையில் தோய்ந்து (முழுகி), வீடு பெருக்கி, கழுவி, முற்றம் கூட்டி, வாசலில் சாணம் கொண்டு மெழுகி அதில் உலக்கை வைத்து அரிசி மா, மஞ்சள் மாவினால் அல்லது செங்கட்டி மண்ணால் கோலம் போடுவார்கள். முற்றம்  சீமந்தினால் ஆனதாயின் அதனை சுத்தம் செய்து கழுவி கோலம் போடுவார்கள். அத்துடன் வீட்டு வாசலில் (கதவு நிலையில்) மாவிலை கட்டி சூரிய பகவானை வரவேற்க தயாராக இருப்பார்கள்.
புதுமனை, புதுமணமக்கள் இருப்பவர்கள் பொங்கல் விழாவை ”தலைப் பொங்கல்” என வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு வெள்ளையடித்து, வீட்டை அலங்கரித்து, தாமும் புத்தாடை அணிந்து சூரிய பகவானின் ஆசியைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். துக்கமான நிகழ்வுகள் நிகழ்வுற்ற குடும்பத்தினர் பொங்கல் விழாவை ஒரு வருடத்திற்கு தவிர்த்துக் கொள்வார்கள்.

யாழ்ப்பாணதில் அமைந்துள்ள வீடுகளில் பெரும்பான்மையானவை வடக்கு வாசல் அல்லது கிழக்கு வாசல் வீடுகளாக  இருப்பதனால் வீட்டு முற்றத்தில் காலையில் சூரிய ஒளி விழக்கூடியதாக அமைந்திருப்பதனால் சூரிய ஒளி பற்றி சிந்திக்க தேவை ஏற்படுவதில்லை. ஆனால் வீடு மேற்கு அல்லது தெற்கு வாயிலாக அமைந்திருக்குமாயின் சூரிய ஒளி படும் படியான இடமாக தேர்ந்தெடுத்தல் அவசியமாகின்றது.  (வெளிநாடுகளில் வசிப்பவர்கள் காலநிலை, சுவாத்தியம், சட்டங்களுக்கு ஏற்ப பொங்க வேண்டி இருப்பதனால் வசதிகளை கருத்திற் கொண்டு வீட்டு குசினியை சுத்தம் செய்து பொங்கல் பொங்கி சூரியஒளி படும் இடத்தில் படைத்து வழிபடுகின்றார்கள்)
நாற்சதுரமாக நாற்புறமும் வாசல் வைத்து கோலம் போட்டு குறிக்கப்பட்ட இடத்தை புனித இடமாக மதிப்பார்கள். கோலம் போடப்பெற்ற இடத்தினை நான்கு கம்புகள் நட்டு அதில் நூல்ன் கட்டி  தோரணம், மாவிலை தொங்க விடுவார்கள். கோலமிட்டு புனிதமாக்கிய இடத்தின் நடுவில் புதிதாக மண்ணினால் பிடித்து வைத்த மூன்று அடுப்புகட்டிகளையும் வைத்து பொங்கல் பானை வைப்பதற்கு அடுப்பை தயார்படுத்துவார்கள். சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கு முன் வீட்டின் சுவாமி அறையில் தீபம் ஏற்றி வணங்கியபின் சூரிய பொங்கலை ஆரம்பிப்பார்கள்.
குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தோத்திரங்கள் பாடி நிற்க சாணத்தினால் பிள்ளையார் பிடித்து வைத்து (பிள்ளையார் சிலையும் வைக்கலாம்), நிறைகுடம் வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து வைத்து தூபம், தீபம் காட்டி  விநாயகரை வழிபெற்றபின், அடுப்பில் நெருப்பு மூட்டி, புதுப்பானையின் கழுத்தில் மாவிலை, இஞ்சி இலை, மஞ்சள் இலைகளைக் கட்டி(காப்புக் கட்டி), விபூதிக் குறிகள் வைத்து, திலகமிட்டு புனிதமாக்கி அதனுள் நீரும் பசுப்பாலும் விட்டு அடுப்பில் பொங்க வைப்பார்கள். பால் பொங்கி எழுந்து வழியும் வரை நெருப்பை கூட எரிய விடுவார்கள். பால் பொங்கி வழியும்போது கடவுளை வணங்கி  புது அரிசியை வீட்டுத் தலைவர் அல்லது ஆண்மகன் இரு கைகளினாலும் அரிசியை கிள்ளி மூன்று முறை (வலஞ்சுளியாக) சுற்றி பானையில் இட்டு மகிழ்ச்சியுடன் பொங்கலிடுவார்கள். அப்போது சக்கரைப் பொங்கலாயின் பயிற்றம் பருப்பு, சக்கரை, கஜு, ஏலக்காய் முதலியவற்றை போட்டு பொங்கல் செய்வார்கள். பொதுவாக தைப் பொங்கலின்போது சக்கரைப் பொங்கலே பொங்குவது வழக்கம் ஆனால் சிலர் வெண்புக்கையும் சாம்பாரும் (கறியும்) வைப்பார்கள். சிறுவர்கள் பட்டாஸ் கொழுத்தி, மகிழ்ச்சியோடு ஆடிப்பாடுவர்.
பால் பொங்கி அரிசி போட்டபின் பானையில் இருக்கும் மிதமிஞ்சிய நீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து அதனை பூஜைகள் முடியும் வரை வைத்திருந்து அதனை மாவிலை கொண்டு வீடின் எல்லாப் பகுதிகளுக்கும் படும் படியாக தெளிப்பார்கள். அந் நீரில் சூரியனின் சக்தி இருப்பதால் சூரிய பகவானின் சக்தி எல்லா இடங்களிலும் பட்டு பிரகாசிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

பொங்கிய பொங்கலை ஒரு தலை வாழையிலையில் படைத்து அதன் மேல் பகுதியை குழிவாக்கி அதன் மேல் வாழைப்பழத்தை உரித்து வைத்து அதன் மீது தயிர் விட்டு, சக்கரையும் வைப்பார்கள். பலகாரங்களை (வடை,மோதகம், முறுக்கு) என்பனவற்றை இன்னொரு தலைவாழையிலும், சுத்தம் செய்யப் பெற்ற பழங்களை வேறு ஒரு தலை வாழையிலையிலும் படைப்பார்கள். படையல் படைக்கும் போது (சூரியனுக்கு வலப் பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்குபடி படைத்தல் வேண்டும்.  வாழை இலைகளில் படைத்த பின், தேங்காய் உடைத்து வைத்து சூரிய பகவானுக்கு
 தூப, தீபம் ஆராத்தி எடுத்து அனைவரும் பக்தியோடு பஜனை பாடி சூரியனை வணங்குவார்கள். படையல்சூரியனுக்கு படைத்த பொங்கலை அனைவரும் சேர்ந்து உண்டு மகிழ்ந்து பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

உறவினர்கள், நண்பர்கள் துக்க நிகழ்வுகள் (ஆசூசம்) அல்லது வேறு சமூகத்தவர் என்னும் காரணமாக பொங்காது இருந்தால் அவர்களுக்கும் தமது பொங்கலை பரிமாறி அவர்களையும் மகிழ்விப்பார்கள்.

பொங்கல் பண்டிகை நாளில் ஊரில் பல பாகங்களிலும் தமிழன் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் முத்தமிழ் (இயல், இசை, நாடக) கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். அவற்றிலும் மக்கள் பங்கேற்று மகிழ்ச்சி பொங்குவர்.

பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் “பட்டிப்/மாட்டுப் பொங்கல்” தினமாக கொண்டாடும் வழக்கமும் அவர்களிடம் உண்டு. உழவனின் நண்பனாக இருந்து உழைத்த (மாடாக உழைத்த) மாடுகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக பட்டிப் பொங்கல் கொண்டாடும் மரபு காணப்படுகிறது. அன்றைய தினம் மாடுகளைக் குளிப்பாட்டி, விபூதி குறிகள் வைத்து, சந்தணம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர் சாத்தி அல்லது மலர் மாலை சாத்தி, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுத்தொழுவத்தில் பொங்கல் பொங்கி மாட்டை கடவுளாக மதித்து அதற்கு படையல் படைத்து உண்ணக் கொடுத்து, தாமும் உண்டு மகிழ்வர்.

வீட்டு சாமியறையிலும் சமையலறையிலும் கட்டப்பட்ட “புதிர்” நெல் அடுத்த வருடம் புதிர் எடுக்கும் வரை அப்படியே இருக்கும். பொதுவாக பொங்கல் தினம் முடிவடைந்த பின்னர் வசதியான ஒரு நாளில் “அருவி வெட்டு” இடம்பெறும். அல்லது பொங்கலுக்கு முன்பாகவே அரிவி வெட்டு நிகழ்ந்திருக்கும். பொதுவாக  விதை நெல்லின் வர்க்கத்தைப் பொறுத்தே அதன் விளைவு காலம் இருக்கும். பொதுவாக சில நெல் 3, 4, 5-6 மாதங்களில் பூரண விளைவை அடைந்து விடும். ”மொட்டைக் கறுப்பன்” நெல்லின் விளைவு காலம் 5-6 மாதங்களாகும். இதன் விளைவும், ருசியும் பிரமாதம். பொதுவாக மொட்டைக் கறுப்பன் நெல் ஆடி மாதத்தில் விதைத்து மார்கழி தை மாதங்களில் அறுவடை செய்வார்கள். காலத்தையும், தேவையான தண்ணீரின் அழவைப் பொறுத்து பள்ளக் காணிகளில் மாத்திரம் பயிர் செய்யப் பெறுகின்றது.

பாடுபட்டு உழைத்த உழைப்பின் மூலம் கிடைத்த நெற்கதிர்களை அறுத்து காயவைத்து “சூடடிப்பார்கள்”. சூடடிப்பிற்கு முற்காலத்தில் மாடுகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் தற்காலத்தில் ட்ரக்ரர்களின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. எந்த முறை மூலம் என்றாலும் சூடடித்த நெற்தானியங்களை வீட்டுக்கு கொண்டு சென்று சாமியறைகளில் வைக்கும் வழக்கம் இன்றும் அங்கு காணப்படுகிறது.

நெல் தானியம் என்பது செல்வங்களுள் முக்கியமான ஒன்றாக அவர்களால் கருதப்படுகிறது. எனவே இறைவன் இருக்கும் இடத்தில்தான் செல்வம் இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய கருத்தாகும். அதனால் சாமியறையில் “கோர்க்காலி”என்னும் உயர்ந்த மேடையில், தங்கள் உழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற செல்வங்கள் அனைத்தையும் மூட்டைகளாக கட்டி வைக்கிறார்கள்.

சூடு அடிக்கப்பெற்றபின் எஞ்சியிருக்கும் வைக்கோலைக் காயவைத்து, கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடான நேரம் கொடுப்பதற்காக குவியலாக (பட்டடையாக) குவித்து வைப்பார்கள். பதிர்களை (சப்பட்டை) எடுத்து அவற்றை இளம் பசுக்கன்றின் சாணத்துடன் சேர்த்துக் குழைத்து அதனைக் காயவைத்து விபூதி செய்வதற்காக பாவிக்கின்றார்கள்.

அறுவடை மூலம் கிடைக்கும் நெல்லில், தமக்கு உதவி புரிந்த தொழிலாளர்களுக்கும் பகிந்து கொடுத்தபின், தமக்குத் தேவையானவற்றை சேமித்து வைக்கிறார்கள். மிகுதியானவற்றை விற்று விடுவார்கள். அவர்களின் உழைப்பின் மூலம் கிடைக்கின்ற செல்வம் தை மாதத்தில் கிடைக்கப் பெறுவதனால் போலும் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி தோற்றம் பெற்றிருக்கிறது. தை மாதத்தில் அவர்களிடம் பணப்புழக்கம் அதிகமாக காணப்படும்.

இதன் காரணமாக திருமணங்கள் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை அதிகமாக தை மாதத்தில் தமிழர்கள் நடாத்துவார்கள். இந்தப் பழமொழியின் தாக்கம் யாழ்ப்பாணத்து மக்களிடையே இன்றும் காணலாம்.

தைத்திருநாள். உலகம் வாழ் தமிழர்கள் அனைவரும் இன்று தைப்பொங்கல் திருநாளை வெகு குதூகலமாகக் கொண்டாடுகின்றனர். இச்சமயத்தில் எமது இணயத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதலாந் திகதியை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை 'மகர சங்கராந்தி தேவதை' என்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனி பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை- தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.

இத்தகைய புண்ணிய தினமான சங்கராந்தியன்று சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்திர அயனம் என்று பெயர். இத்தினத்தில் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.

இன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே கிடையாது. வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. "நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே"என்று வேதம் கூறுகிறது.

மேலும், சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை "ஓம் ய ஏஷோந் தராதித்யே ஹிரண்மய புருஷ" எனப் புகழ்கிறது.

ஞாயிறு, 25 நவம்பர், 2012


உலகின் மிகப்பெரிய உள்ளக கடற்கரை


உலகின் மிகப்பெரிய உள்ளக கடற்கரை, ஜேர்மனிய கிராமமொன்றின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில், சுமார் 6 ஆயிரம் மக்கள் ஒரே தடவையில் சூரிய ஒளியை அனுபவிக்க முடியும்.

கிறவுன்ஸ்னிக் பகுதியில் அமைந்துள்ள வெப்ப வலயத் தீவின் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இதில்  சுமார் 50 ஆயிரம் மரங்களைக் கொண்ட காடும் உள்ளது.

பெரிய பலூனொன்றில் பறக்கக்கூடிய வகையிலான பறந்தளவு நிலப்பரப்பில் இந்த கடற்கரைச் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் மிகப்பெரிய நீச்சல் தடாகமும் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய விமானக் கூடாரம் ஒன்றே பின்நாட்களில் கடற்கரை சுற்றுலா மையமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.