'கலாசார தீவிரவாதத்தை' சட்டரீதியாக எதிர்கொள்வேன்: கமல்ஹாசன்
'விஸ்வரூபம்' திரைப்படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இத்திப்படத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கமல்ஹாசனின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது திரைப்படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. எனது அறிக்கைகள், பேச்சுக்கள் மூலம் அச்சமூகத்தின் அனுதாபியாக என்னை நான் நிரூபித்துள்ளேன். ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் குரல் கொடுத்துள்ளேன்.
மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.
சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் இலாபத்திற்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள முஸ்லீமும் இந்த திரைப்படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார்.
அதற்காகவே இந்த திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நான் சட்டத்தையும், யதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக