உக்ரைனில் போர் மூளும் அபாயம்: ரஷ்ய அதிபர் புடினுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
[
வாஷிங்டன்: உக்ரைன் அருகில் உள்ள கிரிமியாவில் ரஷ்யா ராணுவத்தை குவித்துள்ளது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படைகளை அங்கிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் அணி திரண்டுள்ளன. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
ரஷ்யாவில் இருந்து பிரிந்த உக்ரைனில் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது என்று கூறி எதிர்க் கட்சியினர் கடந்த 3 மாதங்களுக்கு மேல் பயங்கர போராட்டத்தில் ஈடுபட்டனர். நெருக்கடி முற்றியதை அடுத்து உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் தலைமறைவாகி விட்டார். அவர் ரஷ்ய எல்லையில் உள்ள கிழக்கு பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு அர்செனி யாத் செனியுக் புதிய பிரதமராகவும், அலெக்சாண்டர் துர்ஷிநோவ் புதிய அதிபராகவும் பதவியேற்றனர்.
உக்ரைனில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. விக்டர் யனுகோவிச்சுக்கு ஆதரவாக செயல்படும் ரஷ்யா, கிழக்கு பகுதியில் உள்ள கிரிமியா சுயாட்சி பிரதேசத்தில் படைகளை குவித்துள்ளது. அங்கு 16 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள 2 விமான நிலையங்களையும், அரசு அலுவலகங்களையும் ரஷ்ய ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படைகளை அங்கிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று புடினை போனில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார். அதை புடின் நிராகரித்து விட்டார்.
அத்துடன் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு புடின் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார். இதனால் உக்ரைனில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி8 நாடுகளும் ரஷ்யாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற ஜி8 நாடுகள் திட்டமிட்டுள்ளன. உக்ரைன் விவகாரத்தால் கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை உயரும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக