எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 5 மார்ச், 2014

ஏப்ரல் 12ம் திகதி Vincennes இல் இருக்கும் மிருகக் காட்சிச் சாலை மீண்டும் திறக்கப்படுகின்றது.

ஏப்ரல் 12ம் திகதி Vincennes இல் இருக்கும் மிருகக் காட்சிச் சாலையானது ஐந்துவருடத் திருத்த வேலைகளின் பின்னர் மீண்டும் திறக்கப்படுகின்றது. இங்கு இருக்கும் மிருகங்களின் கண்காணிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள நவீன வைத்திசாலையில் இருக்கும் சிறப்புக் கருவிகள், சில பெரிய வைத்தியசாலைகளில் கூட இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிருக வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக் கூடம், கதிரியக்கப்படச்சாலை (salle de radiographie), பரிசோதனைக்கூடம், உடலப் பரிசோதனைக் கூடம் போன்றவை எல்லாம் நவீன உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளதாக மிருக வைத்தியர் Nathalie Doniat தெரிவித்துள்ளார்.

இங்குள்ள சத்திரசிகிச்சை அறையில் மிகவும் நவீன முறையில் மின் இணைப்புக்கள் மற்றும் மின் உபகரணங்களைச் செருகும் செருகிகள் அனைத்தும் கூரையிலேயே (plafond) அமைக்கப்பட்டுள்ளது. சுவரில் எந்தவிதமான இணைப்புக்களும் இல்லை.

மிருகக் காட்சிச் சாலைக்கு கொண்டு வரப்படும் எந்தப் புதிய மிருகமும் இந்த மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் எடுக்கப்படும் கதிரியக்கப் படங்கள், இரத்தப் பரிசோதனைகள் அனைத்துமே கணினியல் சேமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒவ்வொரு மிருகத்திற்கும் தனிப்பட்ட மருத்துவப் பதிவு இருக்கும் என நத்தாலி தோணியா தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக